தசாபுத்தி

அன்பார்ந்த வாசக பெருமக்களுக்கு, வணக்கம்.


இறைவன் மிக நல்ல முதலாளி. நம் செயல்களிலிருந்து நமக்கு பரிசு தருகிறார். அதை எப்படி நாம் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதை ஒரு சிறு கதையின் மூலம் பார்ப்போமா....


ஒரு கட்டிடப் பொறியாளரிடம் பல வருடங்களாக வேலை பார்த்து வந்த மேஸ்திரி, உறவினர் ஒருவரின் கட்டிடத்தை தனியாக ஒப்பந்தம் போட்டு கட்ட திட்டமிட்டார். ஒருநாள் திடீரென தாம் ஓய்வு பெற விரும்புவதாக பொறியாளரிடம் தெரிவித்தார்.


ஒரு நிமிடம் தயங்கிய பொறியாளர்"சரி.. ஒரே ஒரு வீடு மட்டும் கடைசியாகக் கட்டித் தாருங்கள்... நன்றாக உங்கள் திறமை முழுவதையும் போட்டுக் கட்டுங்கள். நான் அங்குவந்து பார்க்கக் கூட நேரமில்லை. உங்கள் பொறுப்பில் விடுகிறேன்.” என்று, வீட்டின் கட்டுமானப் பணியை ஒப்படைத்தார்.


மேஸ்திரி வேண்டா வெறுப்பாக, அவசரம் அவசரமாக புது வீட்டின் கட்டுமானப் பணியை செய்தார். தரக்குறைவான பொருட்கள்... தரக்குறைவான கட்டுமானம்... தனியாக ஒப்பந்தம் போட்டு, வியாபாரம் தொடங்கும் அவசரத்தில் பணியை துரிதமாக முடித்து, வீட்டுச்சாவியை ஒப்படைத்தார்.


அந்த வீட்டுச்சாவியை மேஸ்திரியிடம் திருப்பிக் கொடுத்த பொறியாளர்அந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு... நீண்ட காலம் நீங்கள் என்னிடம் பணிபுரிந்ததற்கு - விசுவாசமாக நான் தரும் நன்றிக் காணிக்கை”.என்றார்


மேஸ்திரிக்கு இடி இறங்கியது போல் இருந்தது. 'அடடா.. தனக்கு என்று முன் கூட்டியே தெரிந்திருந்தால், இப்படி மோசமாக கட்டியிருக்க மாட்டேன்' என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டார்.


கடவுள் மிக நல்ல முதலாளி. அவர் எப்போதும் - எந்த ரூபத்திலாவது எல்லோருக்கும் உதவிக்கொண்டுதான் இருக்கிறார். நாம் தான் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் எந்த செயலிலும், முழு ஈடுபாட்டுடன் நல்ல எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் நமக்கு நல்லது நடக்கும்


இதற்கு ஒரு உதாரணம் அனுமன்.


சூரிய ஒளியைக்கூட பந்தல் போட்டு மறைத்து விடலாம். காற்றுப்புகாத இடம் உலகில் இல்லை ? காற்றாகிய வாயு பகவான் எவ்வித எதிர்பார்ப்புமின்றி 24 மணி நேரமும் உயிர்களுக்கு சேவை செய்கின்றார்.


இம்மாதம் 26ஆம் தேதி அனுமன் ஜெயந்தி. முன்பின் தெரியாத ஸ்ரீராமனுக்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்தார் அனுமன். இந்த சேவைக்காக அவர் கர்வம் கொள்ள வில்லை. இந்த புகழெல்லாம் பகவானுக்கே. தனது எஜமான் ராமனுக்கே உரியவை என்றார்.


ராமனிடம் மாறாத நம்பிக்கையும், பக்தியும் கொண்டிருந்த அனுமானின் இந்த அரிய பண்பை நாமும் நம்முள் வளர்த்துக் கொள்ள வேண்டும் - என்று கேட்டுக் கொண்டு.


எல்லோரும் எல்லா வளமும் பெற்று - நலமுடன் வாழவாயுமைந்தனை (அனுமனை) வேண்டிக் கொள்கிறேன்.



என்றும் அன்புடன், தே. தீனதயாளன் ஆசிரியர்.